Thursday, February 13, 2014

கேந்திராதிபத்திய தோஷம்

ஜாதகத்தில் லக்னம் எனப்படுவது நாம் பிறக்கும் போது சூரியன் இருக்கும் ராசி மண்டலத்தைக் குறிப்பிடுவதாகும். லக்னமான ராசிமண்டலத்திலிருந்து கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 4,7 மற்றும் 10 ஆவது ராசிமண்டலங்கள் சூரியனின் சுழற்சி விதிகளின்படி குளிர்ந்த தன்மையான கதிர் வீச்சினைக் கொண்டிருக்கும். இப்படி ஏற்கனவே குளிர்ந்த தன்மையுடைய இந்த இடங்களுக்கு அதிபதிகளாக வரும் குரு, சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்கள் தங்களது குளிர்ந்த கதிர்வீச்சினால் அவ்விடங்களை மேலும் குளிர்வித்து உறைநிலைக்கு கொண்டுசெல்கின்றன. அதனால் அந்த ராசிமண்டலத்திலிருந்து வரும் கதிவீச்சுக்கள் வலுவிழந்துவிடுகின்றன. அதனால் குறிப்பிட்ட அந்த பாவத்தின் பலன் ஜாதகருக்கு மறுக்கப்பட்டுவிடும் அல்லது பிரச்சினைக்குள்ளாகும். இதைத்தான் ஜோதிடத்தில் கேந்திராதிபத்திய தோஷம் என்கிறார்கள்.

ஆனால் இவ்விடங்களுக்கு வரும் சனி,செவ்வாய், ராகு, கேது போன்ற பாவக் கிரகங்கள் தங்களது வெப்பக் கதிர்வீச்சை இவ்விடங்களுக்கு அளித்து இவ்விடங்கள் கொண்டிருக்கும் குளிர்ந்த கதிவீச்சால் தங்களது பாவத்தன்மையிலிருந்து விடுபடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட பாவம் ஜாதகருக்கு நற்பலனைத் தரும். இதனால்தான் பாவக் கிரகங்கள் கேந்திரத்தில் அமைவது விரும்பத்தக்கது.மேற்குறிப்பிட்ட கேந்திர பாவங்களுக்கு எதிர்மறையானது திரிகோண ஸ்தானங்கள் எனப்படும் 1,5,9 ஆம் பாவங்கள்.(லக்னம் எனப்படும் முதல் பாவம் கேந்திரம் மற்றும் திரிகோண இயல்புகள் இரண்டையுமே கொண்டிருக்கும் என்பதால் லக்னம் கேந்திரம் மற்றும் திரிகோணம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்படுகிறது). இவ்விடங்கள் இயல்பாகவே வெப்பக் கதிர் வீச்சுக்களைக் கொண்டிருக்கும் இவ்விடங்களில் அமையும் சுபக் கிரகங்கள் தங்களது குளிர்ந்த கதிர் வீச்சை இவ்விடங்களுக்கு அளித்து அவை இயல்பாகப் பெற்றிருக்கும் வெப்பக் கதிர் வீச்சால் தங்களது சுபாவத்திலிருந்து மாறுபடுகின்றன. இதனால் அக்குறிப்பிட்ட திரிகோண பாவமும் அதில் அமைந்த சுபக் கிரகமும் ஒரு ஜாதகருக்கு நன்மை செய்கின்றன.

சுபக்கிரகங்களான குரு,சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் மற்றும் புதன் ஆகியவை 1,4,7,10 ஆகிய கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரும்போது அவை தனது சுபாவ குணத்தைவிட்டு அசுபத்தன்மை அடைகின்றன. சுபக்கிரகங்கள் அடையும் இந்த நிலையே கேந்திராதிபத்திய தோஷம் எனப்படுகிறது. கேந்திர ஸ்தானங்கள் அவற்றின் சொந்த வீடாக அமைந்தால் ஜாதகருக்கு கேந்திராதிபத்திய தோஷத்தின் கடுமை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக இருக்கும். அவற்றின் திசா புக்திகளில் அதன் தாக்கத்தை நன்கு அறியலாம்.

குருதான் கேந்திராதிபத்திய தோஷத்தில் அதிக கெடுபலனைத் தரக்கூடியவர். சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியவை இதற்குப் பிறகு வரிசைக் கிரகமாக கெடுபலனைத் தருவர்.இந்தக் தோஷத்திலும் நுட்பமான சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக லக்ன கேந்திரத்தில் குருவுக்கு ஏற்படும் பலத்தினால் அது கெடுபலனைத் தராது. சில பாதிப்புகளைத் தந்தாலும் அது சாதாரணமானதாகவே இருக்கும். ஆனால் வர்கோத்தமம் அடைந்த சுபக்கிரகம் கேந்திராதிபத்திய தோஷத்தை உறுதியுடன் தரும். வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும். ராசி,மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்.லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்!. அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேஷ பலன்கள் உண்டு

உதாரண ஜாதாகம் :-
--------------------------------
இந்த ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகர் யார் என்று அனுமானிக்க முடியும்.
ஆம் !! ஜாதகி நமது மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.



திருமணத்திற்கு காரகத்துவம் கொண்ட சுக்கிரன் உச்சம். ஆனால் அது கேந்திர ஸ்தானமாகிவிட்டது. உபய லக்னமான மிதுன லக்னத்திற்கு பாதக ஸ்தானமான கேந்திரத்தில் (7 ஆமிடத்தில்) குரு ஆட்சி. குருவும் சுக்கிரனும் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டுவிட்டன. கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என்றால் அவற்றின் காரகத்துவம், அவற்றின் சொந்த பாவங்கள் மற்றும் அவை ராசிக்கட்டத்தில் அமைந்த பாவங்களின் அடிப்படையில்தான் முதலில் பலனளிக்கும். மற்ற பிற காரணிகள் பிறகுதான் பாதிக்கும். அதனடிப்படையில் குரு காரகத்தினடிப்படையில் குடும்பத்தையும் பாவத்தினடிப்படையில் களத்திர,தொழில் ஸ்தானங்களை கட்டுப்படுத்துகிறார்.

1.ஒரு கிரகம் தனது தோஷமான அமைப்பினால் ஜாதகருக்கு மிகக் கடுமை காட்டும்போது தனது காரகங்களில் ஒன்றை ஜாதகருக்கு முழுமையாக மறுத்துவிடும். பிறகு அக்கிரகம் தொடர்புடைய பிற விஷயங்களில் பாதிப்பைத் தராது.

2.ஒரு கிரகம் ஜாதகருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அளப்பரிய நன்மையை செய்ய வேண்டிய சூழலில் அதன் காரகங்களில் ஒன்றை முழுமையாக கைவிட்ட பின்னரே அளப்பரிய அந்த நன்மையை வழங்கும்.

மேற்சொன்ன இரு விதிகளும் குறிப்பிட்ட கிரகம் கேந்திராதிபத்திய தோஷத்தில் இல்லாமல் இருந்தாலும் செயல்படும்.இதன் பின்னணியை ஆராய்ந்தால் மனித வாழ்வின் சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட கிரகம் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது புலப்படும்.
இந்த ஜாதகத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆளான இரு கிரகங்கள் குரு மற்றும் சுக்கிரன் ஆவர். மேற்சொன்ன விதியினடிப்படையில் பார்த்தால் குரு அதன் காரகத்தில் ஒன்றான குடும்ப வாழ்வை ஜாதகிக்கு முழுமையாக மறுத்துவிட்டார்.இதற்கு குடும்ப பாவத்தில் வக்ரகதியில் நின்ற சனியும் துணை புரிகிறார்.ஆனால் ராஜ்யஸ்தானமான தனது பத்தாவது பாவத்தின் அடிப்படையில் ஜாதகிக்கு ராஜ்ய பரிபாலனம் செய்ய வைக்கிறார். 10 ஆவது பாவத்தில் ஒரு உச்சக் கிரகம் (சுக்கிரன்) இருப்பதால் 10 ஆவது பாவத்தின் பலனை மிக உயர்வாகத் தர வேண்டிய நிலையில் குரு இருக்கிறார்.

கேந்திராதிபத்திய தோஷத்தில் இருக்கும் மற்றொரு சுபக்கிரகம் சுக்கிரன்.அதனால் தனது காரகங்களில் ஒன்றான இல்லற இன்பத்தை ஜாதகிக்கு முழுமையாக மறுத்துவிட்டார். ஆனால் ராஜ்யஸ்தானமான 10 ஆவது பாவத்தில் உச்ச கதியில் அமர்ந்ததால் சுக்கிரனும் ஜாதகிக்கு ராஜ்ய பரிபாலனம் செய்ய முழுமையாக உறுதுணை புரிகிறார். சுக்கிரன் அரசியலுக்கு உரிய கிரகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால் இதைப் பெற ஜாதகி இழந்தது மனிதனை முழுமைப்படுத்தும் குடும்ப வாழ்வை.சுக்கிரனுக்கு மீனம் சொந்த வீடாக இல்லாவிட்டாலும் சுபக்கிரகம் கேந்திரத்தில் உச்சகதியில் அமைந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்தை தர வேண்டியவராகிறார்.

Monday, February 3, 2014

கால சர்ப்ப தோஷம்

ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு நடுவில் மற்ற 7 கோள்களும் வானில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் கால சர்ப்பத்தில் பிறந்த ஜாதகர்கள் ஆவார்கள்.

இந்த தோஷம் உள்ள ஜாதகத்தில் மற்ற நல்ல யோகங்கள் எதுவும் இல்லை எனில் ஜாதகர் வேலை இன்றி திரிவார்.திருமண வாழ்க்கை அமையாது. பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வார்.பொதுவாக அனைத்து கிரகங்களும் கடிகார சுற்றின் படியே இயங்கும். ஆனால் ராகு, கேது கடிகார சுற்றின் எதிர் திசையில் இயங்கும். கால சர்ப்ப தோஷத்தில் இருக்கும் நபர் தன் வாழ் நாளில் 32 வயதிற்கு பிறகே அனைத்து யோகங்களையும் பெறுவார்.

கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரங்கள்:
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை,சுவாதி,சதயம் போன்ற நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அல்லது ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவான் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் குறையும்.

மேலும் காளகஸ்தி,ராமேஸ்வரம் சென்றும் வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்யலாம்.


கால சர்ப்ப யோகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் இசை ஞானி இளையராஜா.




உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காமே காத்திருக்கேன் கை பிடிக்க வருவாரோ..
அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே !!!


என்ற பாடல் முதல் இன்று வரை நம் செவிக்கு இசை விருந்து படைத்துக் கொண்டிருப்பவர்.கலை மகளின் இசை வாரிசு இவர்.அன்பு,பாசம், பிரிவு,சோகம்,அமைதி போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் நம் மனதிற்கு உணர்த்தியது இவருடைய இசை தான்!!!. அனைவரின் இதயத்திற்கும் மிக நெருக்கமான பாடல்களில் முதலிடம் பிடிப்பது இசை ஞானியின் இசைத் தென்றலே!!. அவரின் பாடல்களை இரவினில் கேட்டு ரசித்தால் மனதிற்கு ஒருவித அமைதி மற்றும் நிறைவு கிட்டும். அந்த சுகத்தை எழுத்துக்களில் விவரிக்க இயலாது. உணர்ந்து மட்டுமே அறிய முடியும்.

இசை ஞானியின் இசையில் எவ்வளவோ அற்புதமான பாடல்கள் அரங்கேறியுள்ளன.அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது "சின்ன தாயவள்" from தளபதி.இந்தப் பாடலுக்கு மனதை பறி கொடுக்காதவர் இல்லை நம் மண்ணில்.இந்த பாடலில் இழைந்தோடும் ஒரு தனித்த புல்லாங்குழலின் ஓசை அந்தத் தாயின் வேதனையை நம் மனதிற்கு உணர்த்தும்.பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் கண்கள் பனிக்கும், இதயம் கனக்கும்.உலகில் எங்கிருந்தாலும் நமது தாயின் மடியை தேடச் சொல்லும்.

"புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்" இந்த பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் அன்றுதான் புதிதாய் பிறந்த எண்ணம் தோன்றும்!! இன்னும் எத்தனையோ ஆயிரம் பாடல்கள்.அவற்றின் சிறப்பை எழுதிக்கொண்டே போகலாம்.. வாழ்க இசை ஞானி !! வளர்க அவரது இசைப் பயணம் !!

இசை ஞானியின் ஜாதகம்
பிறந்த தேதி : 2-ஜூன்-1943
பிறந்த நேரம் : 6.40 am
கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி



இவர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருக்கின்றன. 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான்! அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர்.

இந்த ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் லக்கினத்தில்.மற்றும் ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன்(9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார்.அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார்.இந்த அமைப்பு இசை ஞானிக்கு மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்தது.மேலும் இந்த அமைப்பு அவருடைய தொழிலில் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி,சந்திரன் உச்சம் பெற்றதுடன்,அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து,அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.

தர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால்,அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது.சுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் பெரும்பாலும் கலைத் துறையில் தான் ஈடுபடுவார்கள்.இவர்களுடன் குருவும் சேர்ந்ததால்,அவர் இசைக் கலைஞரானார்.பூர்வபுண்ணிய அதிபதி புதன் (5ஆம் இட அதிபதி) லக்கினத்தில் அமர்ந்ததால்,பூர்வ புண்ணியமாக அவருக்கு கர்நாடக இசை,கிராமத்து இசை,மேற்கத்திய இசை என்று பலதரப்பட்ட இசைகளும் வசப்பட்டன!!

நான்காம் வீட்டில் மாந்தி அமர்ந்து ,அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணத்தில் இருப்பது எளிமையான வாழ்கையில் ஈடுபாடு கொடுக்கும். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த மாந்தி கொடுத்த எளிமையும் ஒரு காரணம்!

ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா !!
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இவர் ராஜா தான் !!!