குரு பகவான் தனது சுழற்சியில் ஒவ்வொரு ராசியிலும் தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில், 7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும் நன்மையான பலன்களைக் கொடுப்பார்
வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்
கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நில புலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை உண்டாக்குவார்.
வழக்குகள் வெற்றி பெரும்.மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். எல்லாம் இன்ப மயம் என்று சொல்லும் அளவிற்கு பலன்களை அள்ளித்தருவார்.
குரு பகவான் மே மாதம் 2013 -மே மாதம் 2014 வரை மிதுன ராசியில் சஞ்சாரம் செய்வார். அவரின் சஞ்சாரத்தின் பொது ஏற்படும் பலன்களை ராசி வாரியாக பார்க்கலாம்.
மேஷ ராசி :-
குருபகவான் உங்களது ராசிக்கு 3 ஆம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியடைகிறார்.குரு 5-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை விலகி, திருமணம் கூடிவிடும். குரு 7-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இதனால் தந்தைக்கு கெடுதி இல்லை. தகப்பனார் ஆசியும் அருளும், பொருளும் கிடைக்க பெறுவீர்கள்.
இருந்தாலும் குரு மூன்றில் மறைந்து இருப்பதால் அவரால் பெரிய நன்மை கொடுக்க முடியாது.சில சொத்துகளை விற்று வேறு புதிய இடம் (அ) சொத்து வாங்கலாம்.நண்பர்களுக்கு உதவி செய்து வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடலாம்.மேலும் ஏழில் சனி இருந்துகொண்டு கண்ட சனியை நடத்துகிறார். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். சென்ற ஆண்டில் இருந்த இறுக்கம், தயக்கம் மறையும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் மிதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
ரிஷப ராசி:-
குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தனம் குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு பெயர்ச்சியடைகிறார். இந்த குரு பெயர்ச்சியில் அதிகமான நன்மைகளை அடையப்போவது ரிஷப ராசிக்காரர்கள் தான். இது உங்களுக்கு பல நன்மைகளை தரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும்.மேலும் சனி ஆறாம் வீட்டில் இருப்பதால் அற்புதங்களை நிகழ்த்துவார்.இந்த சனி மிகவும் நல்லது செய்வார்.ஆறாம் வீட்டில் சனி இருப்பதால் எதிரிகளின் பலம் குறையும்.திடீர் பண வரவு கொடுக்கும்.
உடல் நலம்,செல்வம்,மன அமைதி என எல்லா வளமும் கிடைக்கும்.வாழ்கையில் ஏற்றம் உண்டாகும்.காரிய தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.குரு 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து பலன் தரவிருப்பதால், வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும்.குரு வக்கிரம் அடைவதால் எதிர்பாராத லாபம், மனதில் உற்சாகம், குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.இது ஒரு பொற்காலம் என்றே கூறலாம் !!!
மிதுன ராசி :-
மிதுன ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறு்கிறார். ஜென்ம குரு இடமாற்றம் தருவார். சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படக்கூடும். வீண் அலைச்சல் ஏற்படலாம். அதே நேரத்தில் பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும்.
"ஜென்ம குரு வனவாசம் என்கிறது சாஸ்திரம் "
பகவான் ராமர் கூட ஜென்மத்தில் குரு வந்த போது தான் பட்டாபிஷேகம் விட்டு காட்டுக்கு சென்றார்.
மிதுன ராசி கார்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மனதில் ஒரு வித பயம் கொடுக்கும். தனியாக நிற்பது போலவும் உதவிகள் இல்லாதது போலவும் மனது தடுமாறும்.புது இடத்திற்கு இடம் மாற வைக்கும்.புது மனிதர்களுடன் சேர்ந்து வாழ வைக்கும்.மனத்தில் இனம் புரியாத கவலை குடி கொண்டு இருக்கும்.
குரு கேந்திராதிபத்தியம் பெற்று- கேந்திராதிபத்திய தோஷம் அடைந்து ஜென்ம ராசியில் நிற்பது நல்லதல்ல. ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்தும்போது குறுக்கீடுகளும் இடையூறுகளும் தடைகளும் அதிகமாக இருக்கும்.இதுவரை இருந்து வந்த அனுகூல நிலை இந்த குரு பெயர்ச்சியில் இருக்காது. குரு அஸ்தமன காலத்தில் எந்த நன்மைகளும் நடக்காது. கௌரவப் பிரச்சினைகள் எழலாம்.எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எண்ணம்,சொல்,செயல் இவற்றில் நிதானம் காட்டுவது நல்லது.
கடக ராசி :-
குருபகவான் உங்களது ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியடைகிறார். 9-க்குடையவர் 12-ல் மறைவதால் தந்தை வழி சொத்துகள் விரயமாகலாம். 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் ஏற்படும்; வைத்தியச் செலவு ஏற்படலாம்.பொதுவில் இந்த குரு பெயர்ச்சியில் மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாம்.இருப்பினும் சனி நாலில் இருந்து அர்தாஷ்டம சனி நடை பெறுவதால் சுகத்திருக்கு குறை உண்டாகும். தாயின் உடல்நிலை கெடலாம்.மேலும் கல்வியில் கவனம் தேவை
விரய ஸ்தானத்தில் நின்று 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்காக வெளியில் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். 10-க்கு 12-க்குடைய குரு ராசிக்கு 12-ல் நின்று 10-க்கு 10-க்குடைய சனியைப் பார்ப்பதால், வெளிநாட்டு வேலை, உத்தியோகம் உண்டாகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் வந்துசேரும்.
சிம்ம ராசி:-
குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியடைகிறார். இது லாபம் பெரும் கால கட்டம். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பூர்வ புண்ணிய பாக்கியம் நன்மையளிக்கும், எதிர்பாராத லாபங்களும் நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் வந்துசேரும்.சகோதர வகையில் நன்மையும் அனுகூலமும் அடையலாம். நீண்டகாலமாக தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு யோகம் போன்ற காரியங்கள் யாவும் கைகூடும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.வியாபாரம் நல்ல வெற்றி கொடுக்கும்.மேலும் சனி மூன்றில் இருப்பதால் அணைத்து துறையிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி லாபம் கூடும். செல்வ நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். மனக்கவலை நீங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை உண்டாகும்.குருவும் சனியும் நல்ல இடத்தில் இருப்பதால் மிகவும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.இந்த குரு பெயர்ச்சியில் நன்மை பெரும் ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று.
கன்னி ராசி:-
குருபகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியடைகிறார். இதுவரை 9-ல் இருந்த குரு இப்போது 10-ல் மிதுனத்துக்கு மாறியிருக்கிறார். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
குரு அஸ்தமன காலங்களில் ஆரோக்கியம் பாதிக்கும். குடியிருப்பில் பிரச்சினை ஏற்படும். அண்டை அயலாருடன் வாக்கு வாதம், வம்புச்சண்டை உருவாகலாம். வேலையில் இருப்போருக்கு டென்ஷன் ஏற்படும்.
"குரு பத்தில் பதவியும் பறி போகும்" என்று சொல்லுவார்கள்.
குரு 10-ல் நிற்பதால் தொழில் வகைக்காக கடன் வாங்க நேரும். குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகன வகைக்காகவும் கடன் வாங்கலாம். தொழில் வியாபர போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும்.விரும்பாத இட மாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்சல்களையும் கொடுக்கலாம்.ஏழரை சனியின் கடைசி பாகம் நடக்கிறது. ஆகையால் குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை சனி கொடுப்பார்
துலாம் ராசி:-
இதுவரை 8-ஆம் இடத்தில் இருந்து பல துன்பங்களையும் இடையூறுகளையும் தோல்விகளையும் ஆரோக்கிய குறையையும் கொடுத்த குரு பகவான் இப்போது 9-ஆம் இடத்துக்கு மாறுகிறார். பாக்கிய ஸ்தானத்தில் பெயர்வதால் அதிக நன்மைகள் நடக்கும்.இது நல்ல அமைப்பு . சுகங்கள் கூடும். நல்ல தொழில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கும்.
ஜென்ம ராசியை பாக்கிய ஸ்தானத்தில் நின்று பார்ப்பதால், இழந்த செல்வாக்கும் பதவியும் கௌரவமும் அந்தஸ்தும் மீண்டும் தேடிவரும். மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள்மீது சுமத்தப்பட்ட வீண் பழியும் களங்கமும் மாறும். நண்பர்களின் சகாயமும் உடன்பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கூடும். நோய்கள் நீங்கும்.
குரு அஸ்தமன காலத்தில், தகப்பனார் வகையில் அல்லது பங்காளி வகையில் பிரச்சினைகளும் விரயங்களும் உண்டாகலாம். சனி ஜென்மத்தில் இருப்பதால் ஆஞ்சநேய வழிபாடு நன்மை பயக்கும்.
விருச்சிக ராசி:-
7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியடைகிறார். இந்த குருப்பெயர்ச்சி அனுகூலம் இல்லாத பலன்களை தரும். இது நல்ல அமைப்பு இல்லை. முதலில் ஆரோக்கியத்தை வெகுவாக கெடுக்கும்.குடும்பத்தில் வறுமை தாண்டவமாடும். பண பற்றாகுறை கொடுக்கும். எடுக்கும் காரியம் அனைத்தும் தோல்வியில் முடியும்.மேலும் ஏழரை சனியின் முதல் பாகம் அதாவது விரைய சனி நடை பெறுகிறது.இந்த அமைப்பும் சரி இல்லை.இதனால் பண விரயம் கொடுக்கும். மன அழுத்தங்கள் அதிகமாக இருக்கும்.
குடும்பக் குழப்பம்,பொருளாதாரச் சிக்கல்,தேவையற்ற கடன் தொல்லை போன்றவற்றை கொடுக்கும்.உற்றார்,உறவினர்,நண்பர்களின் அவதூறுக்கு ஆளாக நேரிடலாம். குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செலவு செய்ய வைப்பார்.அதே சமயம், 2-ஆம் இடத்தைப் பார்த்த பலன் அதற்குண்டான வரவுக்கும் வழி செய்வார். குரு 4-ஆம் இடத்தைப் பார்த்த பலன் பூமி, வீடு, வாகன வகையிலும் சுபமுதலீடு செலவு உண்டாகும்.ஏற்கெனவே இருக்கும் பழைய சொத்து அல்லது வாகனத்தை விற்று புதிய சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கலாம்.
தனுசு ராசி:-
இதுவரை 6-ல் இருந்து பல இன்னல்களை கொடுத்த குரு பகவன் இப்போது 7-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இது மிகவும் பிரமாதமான அமைப்பு.இதுவரை கண்ட துயரமெல்லாம் பனி போல் விலகும் காலம் இது.தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.கூட்டு தொழில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். கடன்கள் சரியாகி லாபங்கள் பெருகும். தைரியம் மேலோங்கும். சகோதர ஒற்றுமை கொடுக்கும். சிறு சிறு பயணம் கூட கொடுக்கும் .
தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷன், ஊதிய உயர்வு கிடைக்கும். சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் இருந்த சச்சரவுகளும் பிரச்சினை களும் விலகும். பங்காளிப் பகை விவகாரம் தீரும்.
மேலும் சனி பகவான் லாபத்தில் இருப்பதால் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
மொத்தத்தில் இந்த காலம் ஒரு பொற்காலம் என்றே கூறலாம்.
மகர ராசி:-
இது வரை ஐந்தில் இருந்து நல்ல பலன்களை கொடுத்த குரு பகவான் இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 6-ஆம் இடம் என்பது கடன், வியாதி, வைத்தியச் செலவு, எதிரி, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும். இதில் குரு நிற்பதால் இவற்றை அதிகமாக்குவார்.கடன் வாங்குவது கொடுப்பது ஆகியவற்றில் கவனம் தேவை.பொருட்களை மற்றவர்களுக்கு இரவல் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் கருத்து வேற்றுமைகள் வராமல் கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபரத்தில் கூடுதல் கவனம் செலு்ததுவது அவசியம்.
ஆறாம் இடத்திருக்கு குரு வருவது அவ்வளவு நல்லது இல்லை.உடல்நிலை கெடும். தொழில் ரீதியில் நஷ்டம் வேலையில் மேலதிகாரியின் கெடுபிடி தொடரும். மன அமைதி குறையும். பதவி உயர்வு தடை பெரும்.குடும்ப வாழ்வில் பல்வேறு பிரச்சனை கொடுக்கும். கண்களில் கூட பாதிப்பு கொடுக்கும்.12-ஆம் இடத்தை 12-க்குடைய குருவே பார்ப்பதால் விரயங்கள், செலவுகள் வந்தாலும் அவை பயனுள்ள செலவாகவும் நன்மையான விரயங்களாகவும் இருக்கும். சனியும் ராகுவும் 12-ஐப் பார்ப்பதால் சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு 10-ல் சனி, ராகு நிற்பதால் வேலை மற்றும் பதவி உயர்வில் பிரச்சனை உண்டாகும்.
கும்ப ராசி:-
இதுவரை 4-ல் இருந்த குரு இப்போது 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார்.இந்த குரு பெயர்ச்சியில் அதிக நற்பலன்கள் பெரும் ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று.எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.குடும்பத்தில் முன்னேற்றமும் சுபமங்கள நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, மகிழ்ச்சி நிலவும்.இதுவரை உடல் நிலையில் இருந்த கோளாறு சரி ஆகும்.லாபம் அதிகமாகும். பாக்கியங்கள் பெருகும். தொழில் ரீதியில் முன்னேற்றம் கொடுக்கும். வெளிநாடு பயணம் கொடுக்கும்.
தந்தைவழி ஆஸ்திகள் கிடைக்கும். 11-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரவழி சகாயமும் நன்மையும் ஏற்படும். ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் இழந்த பதவி, வேலை மீண்டும் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஒரு சிலருக்கு ஆன்மிகப் பணியில் ஈடுபாடு உண்டாகும்.திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சனி ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தைக்கு உடல்நிலை கெடும் அமைப்பு காணப்படுகிறது
மீன ராசி:-
இதுவரை 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுகிறார்.குரு இந்த ராசிநாதன் என்ற பெருமையால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் அதிகமான கெடு பலன்களை தரமாட்டார்.ஆரோக்கிய குறை ,தொழில் ரீதியில் சங்கடம் மற்றும் பண விரயம் போன்ற அசுப பலன் கொடுக்கும்.
மேலும் சனி எட்டில் இருந்து கொண்டு அஷ்டம சனியை நடத்துகிறார்.
பொதுவில் இன்பம் துன்பம் என கலந்து வரும் காலம் இது. சிலருக்கு டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டாகும்.8,12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால், குடும்பத்தில் அர்த்த மில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். மற்றவர்களின் தவறாக விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம்.சிலருக்கு ஊர்மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்.
குரு, சனி ஆகிய இரண்டு கிரகமும் சரி இல்லாத நிலையில் இருப்பதால் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக இருக்க வேண்டும்.
ராசிநாதனும் 10-க்குடையவருமான குரு 4-ல் அஸ்தமன காலங்களில் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். தொழில் துறையிலும் அல்லது உத்தியோகத்திலும் போட்டி, பொறாமை, பிரச்சினைகள், எதிர்ப்பு, இடையூறுகளை சந்திக்க நேரும். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
No comments:
Post a Comment