Monday, February 3, 2014

கால சர்ப்ப தோஷம்

ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு நடுவில் மற்ற 7 கோள்களும் வானில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் கால சர்ப்பத்தில் பிறந்த ஜாதகர்கள் ஆவார்கள்.

இந்த தோஷம் உள்ள ஜாதகத்தில் மற்ற நல்ல யோகங்கள் எதுவும் இல்லை எனில் ஜாதகர் வேலை இன்றி திரிவார்.திருமண வாழ்க்கை அமையாது. பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வார்.பொதுவாக அனைத்து கிரகங்களும் கடிகார சுற்றின் படியே இயங்கும். ஆனால் ராகு, கேது கடிகார சுற்றின் எதிர் திசையில் இயங்கும். கால சர்ப்ப தோஷத்தில் இருக்கும் நபர் தன் வாழ் நாளில் 32 வயதிற்கு பிறகே அனைத்து யோகங்களையும் பெறுவார்.

கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரங்கள்:
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை,சுவாதி,சதயம் போன்ற நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அல்லது ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவான் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் குறையும்.

மேலும் காளகஸ்தி,ராமேஸ்வரம் சென்றும் வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்யலாம்.


கால சர்ப்ப யோகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் இசை ஞானி இளையராஜா.




உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காமே காத்திருக்கேன் கை பிடிக்க வருவாரோ..
அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே !!!


என்ற பாடல் முதல் இன்று வரை நம் செவிக்கு இசை விருந்து படைத்துக் கொண்டிருப்பவர்.கலை மகளின் இசை வாரிசு இவர்.அன்பு,பாசம், பிரிவு,சோகம்,அமைதி போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் நம் மனதிற்கு உணர்த்தியது இவருடைய இசை தான்!!!. அனைவரின் இதயத்திற்கும் மிக நெருக்கமான பாடல்களில் முதலிடம் பிடிப்பது இசை ஞானியின் இசைத் தென்றலே!!. அவரின் பாடல்களை இரவினில் கேட்டு ரசித்தால் மனதிற்கு ஒருவித அமைதி மற்றும் நிறைவு கிட்டும். அந்த சுகத்தை எழுத்துக்களில் விவரிக்க இயலாது. உணர்ந்து மட்டுமே அறிய முடியும்.

இசை ஞானியின் இசையில் எவ்வளவோ அற்புதமான பாடல்கள் அரங்கேறியுள்ளன.அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது "சின்ன தாயவள்" from தளபதி.இந்தப் பாடலுக்கு மனதை பறி கொடுக்காதவர் இல்லை நம் மண்ணில்.இந்த பாடலில் இழைந்தோடும் ஒரு தனித்த புல்லாங்குழலின் ஓசை அந்தத் தாயின் வேதனையை நம் மனதிற்கு உணர்த்தும்.பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் கண்கள் பனிக்கும், இதயம் கனக்கும்.உலகில் எங்கிருந்தாலும் நமது தாயின் மடியை தேடச் சொல்லும்.

"புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்" இந்த பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் அன்றுதான் புதிதாய் பிறந்த எண்ணம் தோன்றும்!! இன்னும் எத்தனையோ ஆயிரம் பாடல்கள்.அவற்றின் சிறப்பை எழுதிக்கொண்டே போகலாம்.. வாழ்க இசை ஞானி !! வளர்க அவரது இசைப் பயணம் !!

இசை ஞானியின் ஜாதகம்
பிறந்த தேதி : 2-ஜூன்-1943
பிறந்த நேரம் : 6.40 am
கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி



இவர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருக்கின்றன. 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான்! அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர்.

இந்த ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் லக்கினத்தில்.மற்றும் ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன்(9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார்.அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார்.இந்த அமைப்பு இசை ஞானிக்கு மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்தது.மேலும் இந்த அமைப்பு அவருடைய தொழிலில் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி,சந்திரன் உச்சம் பெற்றதுடன்,அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து,அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.

தர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால்,அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது.சுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் பெரும்பாலும் கலைத் துறையில் தான் ஈடுபடுவார்கள்.இவர்களுடன் குருவும் சேர்ந்ததால்,அவர் இசைக் கலைஞரானார்.பூர்வபுண்ணிய அதிபதி புதன் (5ஆம் இட அதிபதி) லக்கினத்தில் அமர்ந்ததால்,பூர்வ புண்ணியமாக அவருக்கு கர்நாடக இசை,கிராமத்து இசை,மேற்கத்திய இசை என்று பலதரப்பட்ட இசைகளும் வசப்பட்டன!!

நான்காம் வீட்டில் மாந்தி அமர்ந்து ,அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணத்தில் இருப்பது எளிமையான வாழ்கையில் ஈடுபாடு கொடுக்கும். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த மாந்தி கொடுத்த எளிமையும் ஒரு காரணம்!

ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா !!
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இவர் ராஜா தான் !!!


No comments:

Post a Comment