Friday, January 31, 2014
காவியத்தாயின் இளைய மகன் - கவியரசு கண்ணதாசன் ஜாதகம் !!!
தமிழராகிய நமக்கு கவியரசு கண்ணதாசன் பற்றி அறிமுகம் தேவை இல்லை.தமிழர்களுக்கு,தமிழ் மொழிக்கு, பெருமை சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அவர்!. கலைமகள் சரஸ்வதி இந்த மாமேதையின் நாவில் குடி இருந்தாள். பள்ளிப் படிப்பை காட்டிலும் அவருக்கு வாழ்க்கை தந்த அனுபவ பாடங்களே அதிகம்!!!. அந்த அனுபவங்கள் தான் அவருடைய பாடல்களில் எதிரொலிக்கும்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கர்வத்தோடு பாடியவர்.இது அவரின் தலைக்கனம் அல்ல. தமிழ்க்கனம். தன் படைப்புகளுக்கு என்றும் மரணமில்லை என்று அந்த அதிசயக்கவி தீட்டிய அர்த்த சாசனம் !!
தனது வாழ்க்கைப் பயணத்தை எந்த வித ஒளிவு மறைவுமின்றி அவரே சுயசரிதமாக புத்தக வடிவில் எழுதியுள்ளார்.நான் படித்ததில் மிகவும் அருமையான புத்தகங்கள்.அவைகள்
வனவாசம் - கவிஞரின் அரசியல் வாழ்க்கை சரிதம்.
மனவாசம் - “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று
தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்ன கவிஞரின் சுய சரிதம்.
அர்த்தமுள்ள இந்து மதம் - ஆன்மீகப் புத்தகம்
எனக்கு அவரின் தத்துவ பாடல்களின் மேல் அலாதி பிரியம். ஒரு மனிதன் தன் வாழ்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை எப்படி பார்க்க வேண்டும் என்பது அவரது தத்துவப் பாடல் வரிகளின் சிறப்பு. மனதை தொட்ட அவரின் தத்துவ வரிகளில் சில,
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.மனிதனின் கவலைகளை மறக்கக் செய்வது அவருடைய எழுத்துக்கள்தான்!. இந்த உலக வாழ்க்கை எனும் மயக்கத்தை தெளிய வைப்பவை கவியரசரின் அற்புத பாடல்கள் மற்றும் எழுத்துக்கள். வாழ்க கவிஞரின் புகழ் !! வளர்க அவர் நம்மிடம் விட்டு சென்ற நினைவுகள் !!!
அவருடைய ஜாதக ஆய்வு மற்றும் பலன்கள் பின்வருமாறு,
பிறந்த தேதி : 24-6-1927.
பிறந்த நேரம் : 11 am
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம்.
சிம்ம லக்கினகார்கள் பெரும்பாலும் சினிமா துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கன்று. லக்கின நாதன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பது நல்லது. அதை விட நல்லது 11ல் இருப்பது.லக்கினாதிபதி சூரியன் பதினொன்றில், அதாவது லாபஸ்தானத்தில். லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் ஜாதகர் அதிர்ஷ்டமானவர்.
இரண்டாம் வீடு, குரு பகவானின் நேரடிப்பார்வையில். மேலும் அந்த வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில். அதனால்தான் அவர் நாடறிந்த கவிஞரானார்.இரண்டு, பதினொன்றாம் அதிபதியான புதன் மாந்தியுடன் சேர்ந்து 12ல் அமர்ந்ததால் பல படங்கள் எடுத்து பலவிதத்தில் பொருள் இழப்பு ஏற்பட்டது.
சிம்ம லக்கினத்திற்கு கடும் பகையான சனி 4ல் அமர்ந்து படிப்பைக் கெடுத்தது. இதனால் தான் அவர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.ஆயுள்காரகன் சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்குக் கிடைக்காததால் அவர் 54 வயதில் காலமானார்.
புதனும் சுக்கிரனும் கூட்டாகச் சேர்ந்ததால் அவர் கலைத் துறைக்குச் சென்றார். சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயும், அவர்களுடன் சேர்ந்ததால், அந்தத்துறையில் அவருக்குப் பெரும் புகழை அவர்கள் மூவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.புதன் சுக்கிரன் கூட்டாக அமைய பெற்றதும் கற்பனைகளுக்கு உரிய கிரகமான சந்திரன் திரிகோணமான 9ல் இருக்கிறார். இதனால் தான் அவர் கவிதைகள் எழுதுவதில் வல்லவராக இருந்தார்.12ல் நீசமான செவ்வாயினால் இவருக்கு சம்பாதித்த அளவிற்கு சொத்துகள் ஏதும் அமையவில்லை.
கேது 5ல் இருந்தால், ஜாதகன் அரசனாக வாழ்வான். அல்லது ஆண்டியாகி மடத்தில் சேர்ந்து விடுவான். இவர் அரசனாகவே வாழ்ந்தார். கவியரசர் என்றால் அவர் ஒருவர்தான்! ஐந்தில் அமர்ந்த கேது அவருக்குப் பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அவரை ஞானம் மிகுந்தவராகவும் ஆக்கியது. எளிமையாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடைய பல பாடல்களை எழுத வைத்தது.
பதினொன்றாம் வீட்டில் ராகு இருப்பதால் "காதல் பெண்களின் பெருந்தலைவன்” என்று பல பெண்கள் சகவாசத்துடன் வாழ வைத்தது.11ல் இருக்கும் ராகு, அதன் திசையில் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு போனது. அவரை அரசவை கவிஞராகவும் ஆக்கியது.
சூரியனும், ராகுவும் ஒன்று சேர்ந்தால், அபாரமான சுய சிந்தனைகள் மற்றும் தனித்து இயங்கும் தன்மை வாய்க்க பெரும். கவிஞரும் இப்படியே வாழ்ந்தார்.லக்கினாதிபதி 11ல் வலுவாக அமர்ந்து 5ஆம் வீட்டைப் பார்வையில் வைத்துள்ளார். குழந்தைக்குக் காரகன் குரு ஆட்சி பலத்துடன் இருக்கிறார்.அதனால் அவருக்கு நிறைய (மொத்தம் 13) குழந்தைகள் இருந்தார்கள்!!!
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment