Friday, January 31, 2014
காவியத்தாயின் இளைய மகன் - கவியரசு கண்ணதாசன் ஜாதகம் !!!
தமிழராகிய நமக்கு கவியரசு கண்ணதாசன் பற்றி அறிமுகம் தேவை இல்லை.தமிழர்களுக்கு,தமிழ் மொழிக்கு, பெருமை சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அவர்!. கலைமகள் சரஸ்வதி இந்த மாமேதையின் நாவில் குடி இருந்தாள். பள்ளிப் படிப்பை காட்டிலும் அவருக்கு வாழ்க்கை தந்த அனுபவ பாடங்களே அதிகம்!!!. அந்த அனுபவங்கள் தான் அவருடைய பாடல்களில் எதிரொலிக்கும்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கர்வத்தோடு பாடியவர்.இது அவரின் தலைக்கனம் அல்ல. தமிழ்க்கனம். தன் படைப்புகளுக்கு என்றும் மரணமில்லை என்று அந்த அதிசயக்கவி தீட்டிய அர்த்த சாசனம் !!
தனது வாழ்க்கைப் பயணத்தை எந்த வித ஒளிவு மறைவுமின்றி அவரே சுயசரிதமாக புத்தக வடிவில் எழுதியுள்ளார்.நான் படித்ததில் மிகவும் அருமையான புத்தகங்கள்.அவைகள்
வனவாசம் - கவிஞரின் அரசியல் வாழ்க்கை சரிதம்.
மனவாசம் - “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று
தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்ன கவிஞரின் சுய சரிதம்.
அர்த்தமுள்ள இந்து மதம் - ஆன்மீகப் புத்தகம்
எனக்கு அவரின் தத்துவ பாடல்களின் மேல் அலாதி பிரியம். ஒரு மனிதன் தன் வாழ்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை எப்படி பார்க்க வேண்டும் என்பது அவரது தத்துவப் பாடல் வரிகளின் சிறப்பு. மனதை தொட்ட அவரின் தத்துவ வரிகளில் சில,
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.மனிதனின் கவலைகளை மறக்கக் செய்வது அவருடைய எழுத்துக்கள்தான்!. இந்த உலக வாழ்க்கை எனும் மயக்கத்தை தெளிய வைப்பவை கவியரசரின் அற்புத பாடல்கள் மற்றும் எழுத்துக்கள். வாழ்க கவிஞரின் புகழ் !! வளர்க அவர் நம்மிடம் விட்டு சென்ற நினைவுகள் !!!
அவருடைய ஜாதக ஆய்வு மற்றும் பலன்கள் பின்வருமாறு,
பிறந்த தேதி : 24-6-1927.
பிறந்த நேரம் : 11 am
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம்.
சிம்ம லக்கினகார்கள் பெரும்பாலும் சினிமா துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கன்று. லக்கின நாதன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பது நல்லது. அதை விட நல்லது 11ல் இருப்பது.லக்கினாதிபதி சூரியன் பதினொன்றில், அதாவது லாபஸ்தானத்தில். லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் ஜாதகர் அதிர்ஷ்டமானவர்.
இரண்டாம் வீடு, குரு பகவானின் நேரடிப்பார்வையில். மேலும் அந்த வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில். அதனால்தான் அவர் நாடறிந்த கவிஞரானார்.இரண்டு, பதினொன்றாம் அதிபதியான புதன் மாந்தியுடன் சேர்ந்து 12ல் அமர்ந்ததால் பல படங்கள் எடுத்து பலவிதத்தில் பொருள் இழப்பு ஏற்பட்டது.
சிம்ம லக்கினத்திற்கு கடும் பகையான சனி 4ல் அமர்ந்து படிப்பைக் கெடுத்தது. இதனால் தான் அவர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.ஆயுள்காரகன் சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்குக் கிடைக்காததால் அவர் 54 வயதில் காலமானார்.
புதனும் சுக்கிரனும் கூட்டாகச் சேர்ந்ததால் அவர் கலைத் துறைக்குச் சென்றார். சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயும், அவர்களுடன் சேர்ந்ததால், அந்தத்துறையில் அவருக்குப் பெரும் புகழை அவர்கள் மூவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.புதன் சுக்கிரன் கூட்டாக அமைய பெற்றதும் கற்பனைகளுக்கு உரிய கிரகமான சந்திரன் திரிகோணமான 9ல் இருக்கிறார். இதனால் தான் அவர் கவிதைகள் எழுதுவதில் வல்லவராக இருந்தார்.12ல் நீசமான செவ்வாயினால் இவருக்கு சம்பாதித்த அளவிற்கு சொத்துகள் ஏதும் அமையவில்லை.
கேது 5ல் இருந்தால், ஜாதகன் அரசனாக வாழ்வான். அல்லது ஆண்டியாகி மடத்தில் சேர்ந்து விடுவான். இவர் அரசனாகவே வாழ்ந்தார். கவியரசர் என்றால் அவர் ஒருவர்தான்! ஐந்தில் அமர்ந்த கேது அவருக்குப் பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அவரை ஞானம் மிகுந்தவராகவும் ஆக்கியது. எளிமையாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடைய பல பாடல்களை எழுத வைத்தது.
பதினொன்றாம் வீட்டில் ராகு இருப்பதால் "காதல் பெண்களின் பெருந்தலைவன்” என்று பல பெண்கள் சகவாசத்துடன் வாழ வைத்தது.11ல் இருக்கும் ராகு, அதன் திசையில் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு போனது. அவரை அரசவை கவிஞராகவும் ஆக்கியது.
சூரியனும், ராகுவும் ஒன்று சேர்ந்தால், அபாரமான சுய சிந்தனைகள் மற்றும் தனித்து இயங்கும் தன்மை வாய்க்க பெரும். கவிஞரும் இப்படியே வாழ்ந்தார்.லக்கினாதிபதி 11ல் வலுவாக அமர்ந்து 5ஆம் வீட்டைப் பார்வையில் வைத்துள்ளார். குழந்தைக்குக் காரகன் குரு ஆட்சி பலத்துடன் இருக்கிறார்.அதனால் அவருக்கு நிறைய (மொத்தம் 13) குழந்தைகள் இருந்தார்கள்!!!
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் !!!
Monday, January 27, 2014
நட்சத்திரங்களும், ராசிகளும்
ராசிகள் ----------- நட்சத்திரங்கள்
மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
மேஷம், சிம்மம் ,தனுசு - நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி , மகரம் - நிலம் ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் - காற்று ராசிகள்
கடகம் , விருச்சிகம், மீனம் - நீர் ராசிகள்.
மேஷம்,கடகம்,துலாம், மகரம் - சர ராசிகள்
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் - ஸ்திர ராசிகள்
மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் - உபய ராசிகள்
நட்சத்திர அதிபதிகள்:-
--------------------
கேது - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,
சூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி
ராசி அதிபதிகள் :
----------------
ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ,அதுவே அவர்களுக்கு வீடுகள். ஒவ்வொரு ராசியின் அதிபதிகள் பின்வருமாறு,
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு
இதைப்போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நவகிரகம் உச்சம் பெரும். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு,
மேஷத்தில் சூரியன் உச்சம் பெரும்
ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெரும்
மிதுனத்தில் உச்சம் இல்லை
கடகத்தில் குரு உச்சம் பெரும்
சிம்மத்தில் உச்சம் இல்லை
கன்னியில் புதன் உச்சம் பெரும்
துலாத்தில் சனி உச்சம் பெரும்
விருச்சிகத்தில் ராகு,கேது உச்சம் பெரும்
தனுசில் உச்சம் இல்லை
மகரத்தில் செவ்வாய் உச்சம் பெரும்
கும்பத்தில் உச்சம் இல்லை
மீனத்தில் குரு உச்சம் பெரும்
12 ராசிகளும் அவர்களின் குணங்களும்
மேஷம் - முன் கோபம் நிறைந்தவர்களாகவும்,எதிலும் முன்னணியில் இருக்கவும் விரும்புபவர்கள்
ரிஷபம் - வேடிக்கையாக பேசும் குணம் கொண்டவர்கள்
மிதுனம் - சாமர்த்தியமாக பேசும் தன்மை கொண்டவர்கள்
கடகம் - பேச்சு திறமையால் காரியத்தை சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்
சிம்மம் - மன தைரியம் அதிகம் கொண்டவர்கள்
கன்னி - அன்பான பேச்சால் பிறரை கவருபவர்கள்
துலாம் - சொந்தம் மற்றும் உறவினர்களோடு வாழ விரும்புபவர்கள்
விருச்சிகம் - எதையும் கண்டு அஞ்சாதவர்கள்
தனுசு - பெரியவர்களிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவர்கள்
மகரம் - நல்ல செல்வாக்கு,கீர்த்தி பெற்றவர்கள்
கும்பம் - தன் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள்
மீனம் - எந்த பிரச்சனையிலும் சிக்காமல் நழுவிவிடும் குணம் உள்ளவர்கள்
நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள் மொத்தம் 9. அவர்களின் தன்மைகள் மற்றும் குணங்களை கீழே காணலாம்.
1.சூரியன்:-
எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!
சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார்,அரசாங்க பதவி ஆத்மபலன் தகப்பனாரிடம் உடன் பிறந்தவர்கள் ஆகியவற்றை ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.
சூரியன் இயற்கையிலே பாப கிரகம் என்பதால் பாப பலன்களை தருவார். சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார். ஐந்தாம் வீட்டில் இருந்தால் கடுமையான் புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்துவார்.
உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே !!
நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு கிரகங்கள் - சந்திரன் வியாழன் செவ்வாய்
பகை கிரகங்கள் - சுக்கிரன் சனி ராகு கேது
திசை காலம் - 6 ஆண்டுகள்
கோசார காலம் - 1 மாதம்
ஸ்தலம் - சூரியனார் கோவில்.
2.சந்திரன்:-
'சந்த்ரமா மனஸோ ஜா' என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலையும் கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்றார்போல் பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுபபலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.
ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' என்ற பழமொழி உணர்த்துகிறுது!
கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!
நட்சத்திங்கள் - ரோகினி,அஸ்தம், திருவோணம்
நட்பு கிரகங்கள் - சூரியன், புதன்
பகை கிரகங்கள் - இராகு, கேது
திசை காலம் - 10 ஆண்டுகள்
கோச்சார காலம் - 2 1/4 நாள்
ஸ்தலம் - திருப்பதி
3.செவ்வாய்:-
செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும்.
ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய்.செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாய்யின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது.கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவர்.
செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2,4,7,8,12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். 3,6,11 இல் செவ்வாய் இருப்பது நல்லது.
நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்பு - சூரியன், சந்திரன், வியாழன்
பகை - புதன், இராகு, கேது
திசைகாலம் - 7 ஆண்டுகள்
கோசார காலம் - 1 1/2 மாதம்
ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
4.புதன்:-
சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்களைப் பற்றி சோதிடத்தில் புதனை வைத்துதான் கணிக்கப்படுகிறது.
பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.
புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும்.விஷ்ணு இவருக்கு அதி தேவதை.புதனுக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. 1,4,7,10 ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் வலிமையுடன் இருப்பார்.
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்பு கிரகங்கள் - சூரியன்
பகை கிரகங்கள் - சந்திரன்
திசைகாலம் - 17 ஆண்டுகள்
கோசார காலம் - 1 மாதம்
ஸ்தலம் - திருவெண்காடு.
5.குரு:-
குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்று அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர்.குரு பார்க்க கோடி நன்மை !!!
புத்திரர்,நல்ல அறிவு,மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள்,தெய்வதரிசனம்,தீர்த்த யாத்திரை,சமுதாயத்தில் நல்ல மதிப்பு,சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.
இவர் பிரஹஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லை.
நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகங்கள் - புதன், சுக்கிரன்
திசை காலம் - 16 வருடங்கள்
கோசார காலம் - 1 வருடம்
ஸ்தலம் - ஆலங்குடி, திருச்செந்தூர்.
6.சுக்கிரன்:-
சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.
அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.
ஆபரணம், அணிமணி சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும். இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி கொண்டு வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. ஒரு ராசியில் 1 மாதம் சஞ்சாரம் செய்வார்.
நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்
நட்பு கிரகங்கள் - புதன், சனி, இராகு, கேது
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன்
திசை காலம் - 20 வருடங்கள்
கோசார காலம் -1 மாதம்
ஸ்தலம் - கஞ்சனூர்
7.சனி:-
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவர். நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே.
ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்க்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.வலிமை,ஆயுள்,அடிமை,எருமை,எண்ணெய்,கஞ்சத்தனம், கள்ளதனம்,மது,எள் தானியம்,இரும்பு,வாதம்,மரணம்,மருத்துவமனை,பயந்த கண்கள்,மனது வெறுக்ககூடிய செய்கை,இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவர்.ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவர். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவார்.சனிக்கு அதி தேவதை யமன். காகமே சனியின் வாகனம்.
இவருக்கு 3,7,10 ஆகிய பார்வைகள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கி செல்வார்.
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்பு கிரகங்கள் - புதன், சுக்கிரன், இராகு, கேத
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை காலம் - 19 வருடங்கள்
கோசார காலம் - 2 1/2 வருடம்
ஸ்தலம் - திருநள்ளாறு
8.ராகு:-
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு,பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து கிரக நிலையை அடைந்தார்.
ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்வார்.சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார்.அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.ஸ்பெகுலேஷன்,சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி.
விஷம்,மரணம்,பித்தம்,பேய் பிசாசு,மது குடித்தல்,திடீர் ஏற்றம்,திடீர் சரிவு,சிறைப்படல்,மாந்திரீகம்,பிறரை கெடுத்தல்,அன்னிய மொழி பேசுதல்,குஷ்டம்,வழக்குகள்,புத்திர தோஷம்,பித்ரு தோஷம்,விஷ பூச்சிகள் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.
நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன் , செவ்வாய்
திசைகாலம் - 18 வருடங்கள்
கோசார காலம் - 1 1/2 வருடம்
ஸ்தலம் - திருநாகேஸ்வரம்.
9.கேது:-
ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.
கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.
இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.
விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவர். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை.
நட்சத்திரங்கள் - அசுவினி,மகம், மூலம்
நட்பு கிரகங்கள் - சனி , சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை காலம் - 7 வருடங்கள்
கோசார காலம் - 1 1/2 வருடம்
ஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம்.